இல்லாமலின் இருத்தல்

Posted by as கவிதை, தமிழ்





வானம் முழுக்க நட்சத்திரங்கள்

நிறைந்திருந்தாலும்,

வராமல் போன ஒற்றை நிலவிற்காகவே

ஏங்கிக்கிடக்கிறது மனம்..

பத்தொன்பது கேள்விகளுக்கு,

சரியாய் விடையளித்தும்,

தவறவிட்ட இருபதாம் கேள்வியே

தேர்வறைக்குப் பின்னும்

தொடர்ந்து வருகிறது.

மாலைமுழுதும் அவளுடன்

இருந்தும் கூட,

அவள் சென்ற பிறகு,

அவள் அமர்ந்திருந்த பெஞ்சையே

வெறிக்கப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

புலம்பெயர்ந்த பிறகுதான் புரிகிறது,

இட்லியும் சாம்பாரும்

இன்னபிற முன்னாள் அலட்சியங்களும்,

இந்நாள் ஏக்கமென்று..

எதிரியாய் கருதியவனின்

மரணத்திற்கு பிறகே உறைக்கிறது,

தவற விட்ட தருணங்களும்,

நழுவிப்போன நட்பின் கணங்களும்..

ஒரு முறை கைகுலுக்கியிருக்கலாமோ?

இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ?

இன்னும் கொஞ்சம் சுகித்திருக்கலாமோ?

கிடைக்கப்போவதில்லை

எனத் தெரிந்தே தேடுவது

பைத்தியக்காரத்தனமாய்த்

தெரியலாம்..

என்ன செய்ய..?

எத்தனை இருந்தாலும் கூட,

இல்லாமல் போவதிலும்,

அதன் இல்லாமை தரும் சோகத்திலும்,

அடையாளம் காணமுடியா முகமூடியோடு

ஏதோ ஒரு சுகம்

ஒளிந்திருக்கத்தான் செய்கிறது

Popularity: 4%



கடவுளுக்கான வாய்ப்பாடு

Posted by as கவிதை, தமிழ்


வாரிச் சுருட்டிக்கொண்டு

காலையில் ஒரு கச்சேரி,



காலைக் காப்பி முடிக்கையில்,

சாலமன் பாப்பையா,



அரக்க பரக்க

மதிய உணவை முடித்தால்,

நமீதா வகையறா பேட்டி,



வாயைப் பிளந்து பார்க்க,

இந்தியத் தொலைக்காட்சிகளில்

முதல்முறையாக… என



ஓரிசாவில் சண்டைபோட்டுக் கொண்டாலும்,

எல்லா கடவுளர்க்கும்

ஒரே வாய்ப்பாடுதான், இங்கு..



செய்தி:

சர்வ சமய சமத்தும்

இந்தியாவில் இல்லையாம்..!

Popularity: 4%



அவளைப் போல் ஒரு கவிதை..!

Posted by as கவிதை, தமிழ்


பழனிபாரதியின் ‘மழைப்பெண்’ கவிதைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றுண்டு.



அது,




“ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு

ஆணும் போதாது காதலுக்கு..

நிலா வேண்டும், மழைவேண்டும்,

மீன் வேண்டும், காடு வேண்டும்,

தும்பி வேண்டும், மழலை வேண்டும்,

மண்புழு வேண்டும்,

கவிதை வேண்டும்.. “

காதல் கவிதைகள் என்றால் கவிஞர்கள் செய்த காலவிரயம் என்று எண்ணியிருந்த எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட உதவிய கவிதைகளில் இதுவும் ஒன்று.( இன்னும் பல உண்டு. அவற்றை பிறகு பார்க்கலாம்)


ஆனால், ஒன்று நிச்சயம். நானும் கொஞ்சம் காதல் எழுதவேண்டும் என்ற ஆவல் துளிர்விட்டது. இதோ நான் எழுதிய கொஞ்சம், இங்கே..

காதல் வந்தாலே, உலகியல் வரையறைகள் தகர்ந்து போவது சகஜம்தான். கவிதையும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எழுதியதை கவிதைகள் என்று சொல்லமாட்டேன். காதல் பித்தில், சில பிதற்றல்கள்.. அவ்வளவே.. !! காதலின் தீண்டல் கண்டவர்களுக்கு இவை சுவைக்கலாம்..!!!

கவிதையை படங்களுடன் காண, இங்கே செல்லவும்..

  • பாடுபொருளாய்

    காதலைக் கொள்வேனென

    கனவிலும் நினைக்கவில்லை.

    நீ

    வந்தாய்..!
  • உன்னில் பிறக்கும்

    கவிதைகளின்

    வளர்ப்புத்தாய்

    நான்..!

  • என் கவிதைகளுக்கு

    முதலும் முடிவும்

    ஒரே புள்ளிதான்,

    முடிவிலியைப் போல,

    நீ..!


  • எத்தனை அலை

    வந்து சொல்லிச்சென்ற

    பின்னும்,

    மிச்சமிருக்கின்றன

    கடலைப்பற்றிய கதைகள்,

    உன்னைப் பற்றிய

    என் கவிதைகளும்…


  • நம்மில் அல்ல,

    நமக்கிடையே

    நிரம்பியிருக்கிறது,

    காதல்..!


  • எழுதாமல் விட்ட வரிகள்தான்

    அதிகம் சொல்கின்றன..

    என் காதலை.. !


  • தேவதைக் கதைகளை

    கேட்டதில்லை நான்..

    ….

    பார்த்திருக்கிறேன்..!


  • என் கவிதைகளை

    அர்த்தமிழக்கச்செய்யும்

    அகராதி

    நீ..!

Popularity: 6%



அகம் பிரம்மாஸ்மி

Posted by as கவிதை, தமிழ்




எண்ணம் தப்பும் வேளைகளில்

எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,

என் கனவுகளை..

பலித்ததும், இழந்ததும்

வேண்டுவதும், வேண்டியதும்

விதவிதமாய் வந்து சென்ற கனவுகள்..

நினைவுகளின் ஏட்டில்,

பலித்தவற்றைக் காட்டிலும்

பலிக்காமல் தொலைந்தவையே

இன்னும் பலம் பெற்றிருக்கின்றன..

வெற்றிடத்தின் தத்துவத்தை

அறிவியலில் அறிந்ததைக்காட்டிலும்,

ஏதேனும் ஒன்றை இழந்ததில் உணர்ந்ததே

நினைவில் நிற்கிறது..

முன்னிரவோ முதல்பகலோ

வினைத்தொகையாய்,

முக்காலத்திலும் முடிவின்றி

நீளும் கனவுகள்..

அய்யனார் கோவிலும்,

பீர்முகமது வீட்டுக் கொல்லையும்,

அஞ்சு கண்ணு பாலமும், ஒற்றைப்பனையும்

வந்த அந்த இரவின் கனவை

இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்..

ரகுவரன் வைத்த வெடிகுண்டை

நானும் ஒருமுறை

செயலிழக்கச்செய்திருக்கிறேன்.

ராமசாமி வாத்தியாரை

பிரம்பால் அடித்திருக்கிறேன்..

கேப்டன் வ்யோமுடன்

அண்டம் சுற்றி அலைந்திருக்கிறேன்..

சில சிரிக்க வைத்திருக்கின்றன

சில சிலிர்க்கவைத்திருக்கின்றன..

புரட்டப்படாத கனவுகளின் சில பக்கங்கள்

செல்லரித்தும் போயிருக்கின்றன,

எவ்வாறாயினும்,

அவை என் கனவுகள்..

என் சிருஷ்டியின் குழந்தைகள்

அவற்றின் பிரம்மன் நான்தான்..

என் படைப்பில் பெருமையிருக்காதா எனக்கு?

அதனால்தான்,

கனவுகள் கறுப்பு வெள்ளையென சொன்ன

ஆசிரியருக்கு நிறக்குருடு என சிரித்தேன்..

ஆனால்,

ஊக்கம் தொலைத்து உறைந்து நிற்கும்

வேளையிலும்,

உடைந்து போன வாழ்வுக்கு வண்ணமிடுபவை

இந்த கறுப்பு வெள்ளை கனவுகள்

என உணர்ந்தபின்,

கண்களைத் தொலைத்தவனல்ல

கனவுகளைத் தொலைத்தவனே

குருடன் என்றேன்..

இன்றும்

வண்ணங்கள் சிந்தியபடி,

புரட்டப்படுகின்றன

என் நினைவுகளின் ஏட்டில்

சில கனவுகள்..

பலித்தவையும், தொலைத்தவையும்..

தான் சேமித்த காசை எண்ணி எண்ணிப் பார்த்து

மகிழும் கருமியைப் போல,

எண்ணம் தப்பும் வேளைகளில்

எண்ணிப் எண்ணிப் பார்க்கிறேன்,

என் கனவுகளை…



Popularity: 5%



குறுக்கெழுத்துப் புதிர்

Posted by as தமிழ், புதிர்


—————————

என்னால முடிஞ்சவரை கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கேன்… நீங்களும் முயற்சிக்கலாமே..

—————————

இடமிருந்து வலம்:

1. நிலாநிழல் (8)
4. இ.வ(9) க்கு கொடுமை சிதையில் (2)
5. கைமேல் வினையின் விளைவு (3)

6. சூளையில் சுட்டாலும் குளிர்ச்சி தரும் (2)
7. நெய்தலின் உரிப்பொருள் (2)
9. பிரிவின் பண்புத்தொகை பெண்ணுக்கு (4)
11. வளர்நிலாப் பருவ அலகு (2)
13. நமக்கு இரண்டு இ.வ(7) க்கு ஒன்று (2)
15. வழிகாட்டும் வினைத்தொகை (5)

வலமிருந்து இடம்:

8. அதிர்வில் ஆரம்பிக்கும் ஆற்றல் (2)
10. ஆண் பெண் பலருக்கும் பொதுவாய் (2)

மேலிருந்து கீழ்:

1. கடவுளோடு கைக்கிளை (6)

2. புதிர் தொடுக்கும் மாயக்குளத்தின் மந்திரக்குரல் (4)
3. கல்லானதால் கள்ளில்லை கனவில் (4)
6. தாலோஃபைட் தாவரம் (2)
7. உயிர் கொடுக்கும் உயிர் எடுத்தாலும் கிடைக்கும் (2)
11. மூப்பின் முன்னுரை ஜன்னலில் (2)
12. 7′up சாம்ராஜியம் (2)



கீழிருந்து மேல்:

8. வனமில்லா வனத்தின் வனவிலங்கு (5)
14. நியாயத்திற்கும் நிறுத்தலுக்கும் ராசியானது (3)
10. புத்தரின் போதனை இந்தோனேஷியாவில் (2)
16. கேள்விக்கு பதில் (3)

Popularity: 9%



நான் ஏன் எழுதுகிறேன்..? ஜெயகாந்தன்

Posted by as எழுத்தாளர்கள், தமிழ்


எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.

எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.

எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.

எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன்.

எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச்செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.

வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.

ஜெயகாந்தனின் வானொலி உரை- ஜீலை-5- 1971



இப்படிச்சொன்ன ஜெயகாந்தன்தான் பின்பொருமுறை, “நீங்கள் ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை?” என்று கேட்டதற்கு,

“நான் விரும்புவதை எழுதுவதற்கு எனக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ, அதே அளவு சுதந்திரம் எழுதாமல் இருப்பதற்கும் உள்ளது” என்றார்..



என்ன ஒரு விசித்திரமான பதில்..! அவருடைய கதாபாத்திரங்களின் சாயல், அவர் மூலம் அடிக்கடி வெளிப்படுவதைக் காணலாம். அல்லது எதிர்த்திசையில் , அவரது குணாதிசியங்கள் அவரின் கதாபாத்திரங்களின் மீது படிந்திருப்பதாகவும் கொள்ளலாம். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கங்காவாகட்டும் ‘யுகசந்தி’யின் கெளரிப்பாட்டியாகட்டும், ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு மூலையில் அவரின் சாயல் தென்படும்.



அவர் தேர்தலிலும் ஒரு முறை போட்டியிட்டிருக்கிறார், தி.நகர் தொகுதியில். அதில் அவர் பெற்ற வாக்குகள் 200க்கும் குறைவே. எதற்காக தேர்தலில் நின்றார்? தெரியாது.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் “என்னை நம்பி வாக்களித்த அனைவருக்கும் நன்றி” என்ற அறிக்கையும் கூடவே வந்தது.



அவருடைய பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் தென்படுவது போன்ற ‘ஸ்திரபுத்தி’யில்லாத தன்மையா? அல்லது, நான் நினைத்ததை நான் செய்கிறேன் என்ற தன்னிறைவா இது.? தெரியாது..



இவை எல்லாவற்றையும் கடந்து, என் மனதைக்கவர்ந்த எழுத்தாளர் அவர்.. அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் ‘கர்வம்’. தான் ஒரு எழுத்தாளன் என்ற கர்வம்.. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அந்த ஞானச்செருக்கே அவரின் அடையாளம்.



பாரதீய ஞானபீட தேர்வுக்குழுவினர் சொன்னது…


“தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது. ”

உண்மைதான்…

Popularity: 7%



படித்ததில் பிடித்தது (1)

Posted by as எழுத்தாளர்கள், கவிதை, தமிழ்


எழுத்தெனப் படுவது…


அதை நான்

எழுதி முடிக்கும் போது

அதற்கான சுவடுகள்

அழிந்து போயிருக்கும்.

அவற்றின் சுவடுகளாய்

என்

எழுத்துக்கள் இருக்கும்


எழுதும் முன்

எது என்னை வதைத்ததோ

அது உங்களை

வதைக்கத்தொடங்கும் போது

நான் எழுதப்பட்டிருப்பேன்








-மு. மேத்தா



(ஆகாயத்துக்கு அடுத்த வீடு)

Popularity: 5%



படம் பார்த்து பதில் சொல்லுங்க..

Posted by as தமிழ், புதிர்


சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம் என் கருத்தைக் கவர்ந்தது.. உங்கள் பார்வைக்கு…. கீழே இருக்கும் புகைப்படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்..







இது தொழிலதிபர் டாடா அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வந்த ஒரு ஓவியம். இதில் ஒளிந்திருப்பது என்ன என்று தெரிகிறதா.? கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய சபாஷ்..

Popularity: 7%



காதலிக்க நேரமில்லை - Title Song

Posted by as tv, தமிழ்


இப்போதெல்லாம் திரைப் பாடல்களுக்கு போட்டியாக வந்து விட்டன நம் சின்னத்திரைப் பாடல்களும். “கண்ணின் மணி… கண்ணின் மணியி”ல் தொடங்கி இன்றைய கோலங்கள் வரை பல பாடல்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தாலும், சமீபத்தில் வெளிவந்திருக்கும் காதலிக்க நேரமில்லையின் தலைப்புப் பாடல் எனனை வெகுவாகக் கவர்ந்தது.



அழகான பாடல் வரிகள், பொருத்தமான குரல் தேர்வு, மனதை வருடும் மெல்லிய Beat உடன் கூடிய இசை என, ஒரு பெண்ணின் ஏக்கங்களை மிக கச்சிதமாக பதிவுசெய்திருக்கும் இப்பாடல் பெரும் ரசிகர் வட்டத்தைப் பெறும் என நம்பலாம்.

உங்களுக்காக அப்பாடல் இங்கே..






kathalikka neramillai
kathalikka neramil…
Hosted by eSnips

Popularity: 7%



இஞ்சி இடுப்பழகி..?

Posted by as சினிமா, தமிழ்




தேவர்மகன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலைக் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.. ஆனால் இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?



உருவகம் பண்ண எவ்வளவோ இருக்கும் போது, கவிஞர் இஞ்சியை எடுத்துக்கொண்டதேன்..?



கொஞ்சம் உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு ஒரு பதில் சொல்லுங்களேன்.. ஒரு சுவையான பதில் என்னிடம் உண்டு.. அதை விட சுவையான பல பதில்கள் கிடைக்குமென நம்புகிறேன்.. பார்க்கலாம்.. :-)

Popularity: 5%



Page 1 of 3123»